திமுக அரசின் முழு நேரப் பணியே ஊழல் செய்வது தானா? - அன்புமணி கேள்வி

கோப்புப்படம்
அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய 3 ஊழல்கள் குறித்தும் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரூ.366 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. ஒரே துறையில் மட்டும் ரூ.2,274 கோடி ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக அந்த ஊழலை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ள இந்த புதிய ஊழல் தொடர்பான ஆதாரங்களுடன் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், கையூட்டுத் தடுப்புப் பிரிவு இயக்குனருக்கும் அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காகவும், அவர்கள் விரும்பும் வளமான பதவிகளில் அமர்த்துவதற்காகவும், பணியமர்த்தப்படும் இடம் மற்றும் பதவியைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் கோடிகள் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருப்பதற்கு பல வகையான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் 340 அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பணியிட மாற்றம் வழங்கியதற்காக மட்டும் ரூ.365.87 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இது மிகக் குறுகிய காலத்தில் வசூலிக்கப்பட்ட கையூட்டுத் தொகைதான் என்றும், இந்த ஊழலின் முழுமையான மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. கையூட்டாக வசூலிக்கப்பட்ட தொகை சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள அமலாக்கத்துறை, இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை மீது அமலாக்கத்துறை அடுத்தடுத்து முன்வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளும், அதை நிரூபிப்பதற்காக வெளியிட்டிருக்கும் ஆதாரங்களும் திகைக்க வைக்கின்றன. ஏற்கனவே, நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்களை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வீதம் மொத்தம் ரூ.888 கோடி கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் காவல்துறை தலைமை இயக்குனருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியதில் ரூ.1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அனுப்பிய அமலாக்கத்துறை, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டது. இந்த இரு ஊழல்களுக்கும் ஆதாரமாக முறையே 232 மற்றும் 252 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை அனுப்பியிருந்தது.
ஏற்கனவே நடந்த ஊழல்கள் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் தமிழகக் காவல்துறை காலம் தாழ்த்தி வரும் நிலையில், மூன்றாவது ஊழலையும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் இதே துறையில் நடைபெற்ற மேலும் பல ஊழல்கள் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஆட்சியியிலிருந்த 5 ஆண்டுகளும் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து வந்தார்களோ? என்ற ஐயம்தான் எழுகிறது. திமுக ஊழலின் மறுஉருவம் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை; அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றால் மடியில் கனமில்லை... அதனால் வழியில் பயமில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்வராத திமுக அரசு, அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ஊழல்கள் அனைத்தையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகளில்தான் தீவிரம் காட்டி வருகிறது.
நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற முதல் ஊழலை கடந்த அக்டோபர் மாதத்திலும், இரண்டாவது ஊழலை டிசம்பர் மாதத்திலும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியது. அவற்றின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் எப்போதோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, இம்மாதத் தொடக்கத்தில்தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த ஆணையிட்டது. ஆனால், அதையும் முன்னேறவிடாமல் முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு.
ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ள வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பி.என்.எஸ். சட்டத்தின் 167(2) பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. நீதியரசர் அல்தாமஸ் கபீர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு வழங்கிய தீர்ப்பிலும் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 60 நாள்களில் ஊழல் வழக்குகளை விசாரித்து, ஆதாரங்களைத் திரட்டி குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்ய வேண்டும் எனும் போது, முதல் கட்ட விசாரணை தொடங்கி 20 நாள்களாகும் நிலையில், அதை முடித்து இன்னும் ஊழல் வழக்கை பதிவு செய்ய திமுக அரசு மறுப்பது ஊழலை மூடி மறைக்கும் முயற்சியாகும்.
தமிழ்நாட்டையே திகைக்க வைத்த நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்களை இனியும் மூடி மறைக்க திமுக அரசு முயலக்கூடாது. அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய 3 ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






