நில ஆவணம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானிய உரமா? - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தமிழக அரசு இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, முந்தய நிலையிலேயே விவசாயிகள் ரசாயண உரங்களைப் பெற்றிட நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறோம்.
பி.எஸ்.மாசிலாமணி
Published on: 

சென்னை,

நில ஆவணம் உள்ளோர்களுக்கு மட்டுமே இனி மானியத்தில் ரசாயண உரங்கள் என்று மத்திய அரசு நடைமுறைக்கு என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ரசாயண உரம்

விவசாயிகள் வேளாண் சாகுபடிக்கு தேவையான ரசாயண உரங்களை வாங்குவதற்கு இனிமேல் கே.சி.சி.. அட்டையை பெற்று, அவரவர்களின் ஆதார் கார்டுடன் இணைத்து கொடுத்தால் தான், தேவையான ரசாயன உரங்களை பெற முடியும் என்கிற நிபந்தனையை அறிவித்த மத்திய அரசு, சிவகங்கை, ஈரோடு இரு மாவட்டங்களிலும் நேற்று முதல் அமல்படுத்த தொடங்கிவிட்டது. இதை அறிவித்த நேரத்திலேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்தது.

உர வினியோகத்தில் தவறுகளை களைந்து ஒழுங்குப்படுத்தி கண்காணித்திட மத்திய வேளாண் அமைச்சகம், விவசாயிகள், தி தி ஷி எனும் செயலி மூலம் நில பரப்பளவை பதிவு செய்து, கியூ.ஆர் கோடு மூலம் டோக்கன் பெற்று விவசாயிகள் உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த அடையாள அட்டை பெற வேண்டுமெனில், சாகுபடி நிலம் பத்திரப்பதிவுடன் உள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும், நிலம் கிரயம் செய்திருந்தாலும் பத்திரபதிவு செய்து கொள்ளாதவர்கள். ஒப்பந்த சாகுபடியாளர்கள், கோவில், மடம் உள்ளிட்ட நிலங்களின் சாகுபடியாளர்கள் எவருக்கும் அடங்கல் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் கே.சி.சி அடையாள அட்டை கிடைக்காது. கூட்டு பட்டா உள்ளவர்களுக்கு அடங்கல் பிரித்து கிடைக்காது, ஆண்ட்ராய்டு செல்போன் பல விவசாயிகளிடம் இல்லாத நிலையில், அரசு கூறுவது போல் அவர்களே பதிவு செய்யலாம் என்பது வாய்ப்பில்லை. பொது சேவை மையங்களுக்கு சென்றால் இணைய வழி தொடர்பு கிடைப்பதில் சிக்கல்.. விவசாயிகளின் பணம் இருப்பை பொறுத்து உரம் பெற்றிட பல பில் போட்டு உரம் வாங்கிட முடியாது.

சிறு குறு விவசாயிகள்

இதனால் சாகுபடிக்கான உரங்களை டோக்கன் இல்லாதவர்கள் இனி வாங்கமுடியாது. இதனால் வேளாண் மகசூல் பெரும் நிலையில் பாதிக்கப்படும். இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காது ஒன்றிய அரசு கண்மூடித்தனமாக இதை அமல்படுத்தலாமா..? தமிழ்நாட்டில் 60 சதம் விவசாயிகள் குத்தகையாளர்களாவர். இவர்களில் பெரும் பகுதியினர் சிறு குறு விவசாயிகள். இவர்கள் தன் உழைப்பை மட்டுமே நம்பி இயற்கை யோடு போராடி உணவு உற்பத்தியை பெருக்குவதோடு, தன் வாழ்வு நிலையை இதைக்கொண்டு தான் சமாளித்து வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட நில ஆவணம் இல்லாதோர் எந்த சலுகைளையும் பெற முடியாத நிலையில் தான் தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரதமர் நலநிதி எனும் திட்டம் மூலம் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்குவது, கிசான் சமான் அட்டை எனும் விவசாயிகளுக்கான அடையாள சான்று, போன்ற மத்திய அரசின் திட்டங்களில் நில ஆவணமற்றோர் இணைக்கப்படவில்லை.

மத்திய அரசு

தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரதான் மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா என்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள ஓய்வூதிய திட்டம் என்ற நவீன சேமிப்பு திட்டத்திலும் இவர்களுக்கு வாய்ப்பு இல்லை. இப்படி எல்லா வகையிலும் நில ஆவணமற்றோர், குத்தகை சாகுபடி விவசாயிகள் புறம் தள்ளப்பட்டால் இவர்களின் வாழ்க்கைக்கான உத்திரவாதம் குறித்து மத்திய அரசு சிந்திக்க மறுக்கிறது.

இது அமலாக்கப்பட்டால் விவசாயிகளிடையே பெரிய கொந்தளிப்பு ஏற்படும். அதுவும் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், பருவமழை பொய்த்த நிலையில்,, என்னசெய்யப்போகிறோம் என்கிற அச்சத்தில் இருக்கிற விவசாயிகளிடம் இதை அமல்படுத்துவது பெரிய வேதனையாகும். வேளாண் பயன்பாடு உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதால் தான், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைத்து வருகிறது. மானியத்தில் விவசாயிகளுக்காக கொடுத்து வரும் இந்த உர மூட்டைகளை கள்ளத்தனமாக வேறு பயன்பாட்டிற்கு கடத்தப்படும் நிலையில் தான் விவசாயிகள் மட்டுமே இந்த உரங்களை பெற வேண்டும் என்று இந்த புதிய கட்டுப்பாட்டை அரசு அமலாக்குவதாக கூறுகிறது.

கண்டனம்

உண்மையே, இந்த மோசடியை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க அதிகார வாய்ப்பு இருக்கிற அரசு, விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. இதனால் நில ஆவண உரிமையற்றோர் மானிய உரங்களை பெற முடியாது என்ற நிலையை மத்திய அரசு சிந்திக்காதது கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி வழக்கம் போல் மானிய விலையில் ரசாயண உரங்கள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு அவசரமாக இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, முந்தய நிலையிலேயே விவசாயிகள் ரசாயண உரங்களைப் பெற்றிட நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com