

சென்னை,
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு தி.நகர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:-
ரூ.1000, ரூ.2,000 கொடுப்பது தான் பெண்கள் முன்னேற்றமா? பெண்கள் முன்னேறுவதற்கு முதலில் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்கு முன்பு திமுகவினர் பெண்களை மதிக்கும் இடத்தில் இருக்க வேண்டும். பெண்களை மதிக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியமும், மனநிலைமையும் கிடையாது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. உங்களுடைய வீட்டில் உள்ள பெண்கள் வெளியில் சென்றால் அதை நீங்கள் பாதுகாப்பாக கருதுவீர்கள். ஏனென்றால் அவர்களை சுற்றி அதிகமானோர் இருப்பார்கள். உதயநிதி ஸ்டாலினை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், உங்களுடைய தொகுதியில் உள்ள பெண்கள் வெளியில் தனியாக செல்வதற்கு பயமாக இருக்கிறது அண்ணன் என்று உங்களிடம் சொல்வது கிடையாதா? இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.
இதேபோல கனிமொழியை பார்த்தும் ஒரு கேள்வியை கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் பிரச்சினை வரும் போது ஏன் பேசாமல் இருக்கிறீர்கள். உங்களுடைய அண்ணன் ஆட்சி நடக்கிறது என்று தானா? பதில் கொடுக்க திமுகவினருக்கு பயம் அதிகமாக இருக்கிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதல்-அமைச்சர் பதில் சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.