

சென்னை,
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக கட்சிகளுக்கு தான் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா , புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியது. இதற்காக மத்திய மந்திரியும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று இன்று மதியம் பழனிசாமியை சந்தித்து பேசினார். தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார். முடிவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது.
இதன்படி, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள இதர கூட்டணி கட்சிகளுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீட்டுக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் வரவில்லை.
6 தொகுதிகளை கேட்ட ஜி.கே.வாசனுக்கு அதிமுக 4 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.
ஜி.கே.வாசன் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தமுறை ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை பதவி தரப்பட்டது. இம்முறை அதுவும் இல்லை.