

சென்னை,
மருத்துவ சேவை அரசு பணம் டாஸ்மாக்கிற்கு பயன்படுத்தப்படுவதாக பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மாநிலம் முழுவதும் 38 கிடங்குகளை இயக்கி வருகிறது. இதில் 5 உதவிப் பொறியாளர்கள் கொண்ட ஒரு சிவில் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவிற்கு மேலும் 7 உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிதியை டாஸ்மாக் நிறுவனம் வழங்குகிறது.
சிவில் பிரிவை வலுப்படுத்த உதவும் இந்த நடவடிக்கைக்கு, இரு அரசு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, சில டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளை மட்டும் மருத்துவப் பணிகள் கழகம் மேற்கொள்ளவுள்ளது.
பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கான செலவுகளை டாஸ்மாக் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதனால் மருத்துவப் பணிகள் கழகத்தின் நிதியை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.