ஆன்-லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பா? - தெற்கு ரெயில்வே விளக்கம்

‘ஆன்-லைனில்’ முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ஆன்-லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
Published on

சென்னை,

ரெயில்களில் ஆன்-லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதற்காக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். அது ஆங்கிலத்தில் தான் இடம்பெறும். ஆனால், தற்போது பெயர் மற்றும் புறப்படும் இடம், சேரும் இடம் ஆங்கிலத்தில் உள்ளது. மற்ற எழுத்துகள் அனைத்தும் இந்தியில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், முன்பதிவு செய்த டிக்கெட் உறுதி செய்யப்பட்டதை அறியமுடியாமல் பயணிகள் குழப்பம் அடைவதாக தகவல் பரவியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணி ஒருவர் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தபோது, இந்தியில் குறுஞ்செய்தி வந்து சிரமத்தை ஏற்படுத்தியதாக சிலர் குற்றம்சாட்டினர். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்யும் போது, டிக்கெட் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு ஏதுவாக, விருப்பமான மொழியை ஆங்கிலம் அல்லது இந்தி என்பதை குறிக்க வேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை பார்க்கும்போது, விருப்பமான மொழி இந்தி என சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் அவரது செல்போன் எண்ணுக்கு டிக்கெட் தொடர்பான தகவல் இந்தியில் அனுப்பப்பட்டுள்ளது. இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக, பயணிகள் தங்கள் சுயவிவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்யும் போது, சரியான மொழி விருப்பத்தை தயவு செய்து தேர்வு வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com