“இந்தியா மதசார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்ட நாடா?” - ஐகோர்ட் கேள்வி

சிலர் ஹிஜாப்புக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா மதசார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்ட நாடா?” - ஐகோர்ட் கேள்வி
Published on

சென்னை,

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பூர்வ உரிமை இல்லாத பிற மதத்தினர், வெளிநாட்டினர் உள்ளிட்டோரை கோவில்களுக்குள் அனுமதிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தஞ்சை, மதுரை கோவில்களில் லுங்கி, டிரவுசர் அணிந்து பிற மத்தினர் நுழைகின்றனர் என்றும், வெளிநாட்டினரை கோவில்களுக்குள் அனுமதிக்க கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, குறிப்பிட்ட உடைதான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் உள்ளது? அநாகரீக உடையுடன் கோவிலுக்குள் வருவதாக புகார்கள் உள்ளதா? என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஆகம சாஸ்திரங்களில் வேட்டி தான் அணிய வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்டனர்.

இதற்கு மனுதாரர் அவ்வாறு ஆதாரங்கள் இல்லை என பதிலளித்தார். இந்த நிலையில், சிலர் ஹிஜாப்புக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்தியா மதசார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்டதா? என கேள்வி எழுப்பினர்.

மதசார்பற்ற நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், தமிழக அரசின் ஆடை கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக ஆதாரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com