சீனாவில் இருந்து சேலம் வந்தஜவுளி வியாபாரிக்கு புதிய வகை கொரோனாவா?மரபணு சோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

சீனாவில் இருந்து சேலம் வந்த ஜவுளி வியாபாரிக்கு புதிய வகை கொரோனா பாதிப்பா? என்பது குறித்து கண்டறிய மரபணு சோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து சேலம் வந்தஜவுளி வியாபாரிக்கு புதிய வகை கொரோனாவா?மரபணு சோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு
Published on

சேலம், 

கொரோனா பரிசோதனை

சீனாவில் பி.எப்.-7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 168 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர், தனது மனைவி, குழந்தைகளுடன் வந்தார். பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த பயணிக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகாரிகள் கண்காணிப்பு

உடனே அவருடைய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. எனவே அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, நல்ல உடல்நிலையுடன் இருப்பதால் மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

நோய் தடுப்பு நடவடிக்கை

மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

167 பயணிகள் குறித்த பட்டியல்

இதனிடையே, ஜவுளி வியாபாரியுடன் அந்த விமானத்தில் வந்த 167 பயணிகள் குறித்த பட்டியல் வாங்கப்பட்டு, அந்த பட்டியலில் இருக்கும் நபர்கள் குறித்து அந்தந்த பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த பயணிகளை கண்காணித்து வருவதுடன், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com