தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிப்பதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பதினொன்றாம் வகுப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க ஏழை எளிய மாணவர்களிடம் தலா 250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம் பெறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் ஆலயங்களான அரசுப் பள்ளிகளிலேயே இத்தகைய ஊழல் முறைகேடுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கொள்கைத் தெளிவின்றி வெறும் மேடைகளில் மட்டும் "மாற்று ஆட்சி" தரப்போவதாக முழங்கும் முதல்வர் ஜோசப் விஜய், அரசுப் பள்ளிகளில் நடக்கும் இத்தகைய அடிமட்ட ஊழல்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். மேலும், தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 தலைமையாசிரியர் மற்றும் 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தவெக அரசு முன்வர வேண்டும். முறையான வழிகாட்டுதல் மற்றும் பள்ளி நிர்வாகக் கண்காணிப்பை உறுதி செய்ய இப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதும் அவசியமாகும்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி ஊழியர் மற்றும் இதற்குத் துணைபோன பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாகத் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், இனி எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் ஆளும் அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com