உத்தரவு பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா? ஐகோர்ட் நீதிபதி செந்தில் குமார் அதிருப்தி

வழக்கில் தீர்ப்பு அளித்ததற்காக குடும்ப பின்புலங்களை எல்லாம் குறிப்பிட்டு கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கின்றனர்.
சென்னை,
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா, போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களிலும் விரிவாக பேட்டியும் அளித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பேட்டி அளிக்க ஜாய் கிரிசல்டாவுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே வெளியான வீடியோவை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான விஜயன் சுப்பிரமணியன், “மனுதாரர் ரங்கராஜூக்கு 2013-ம் திருமணம் நடந்து 2 மகன்கள் உள்ளனர். அதன்பின்னர் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமான ஜாய் கிரிசல்டா மனுதாரரை மயக்கி, மனுதாரரின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்.
இப்போது, சுமார் 150 யூடியூப் சேனலுக்கு மனுதாரருக்கு எதிராக பேட்டி கொடுத்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்” என்று வாதிட்டார். ஜாய் கிரிசல்டா தரப்பில், மனுவுக்கு விரிவான பதில் மனு அளிப்பதாக கூறினார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். விசாரணையின்போது நீதிபதி, “ஒரு வழக்கில்(கரூர் சம்பவம் தொடர்பான) தீர்ப்பு பிறப்பித்ததால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர். நீதிபதிகளின் செயல்பாடுகளுக்கு கலர் சாயம் பூசுகின்றனர். குடும்ப பின்புலங்களை எல்லாம் விமர்சனம் செய்கின்றனர். அதாவது சமூக வலைதளங்களில் தங்களுக்கு தேவையானதை விரும்பம்போல எழுதுகின்றனர்.
அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் புன்னகையுடன் புறக்கணிக்க வேண்டும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்துவது இயல்பாகி விட்டது” என்று கருத்து தெரிவித்தார். கோர்ட்டில் இருந்த மூத்த வக்கீல்கள் எஸ்.பிரபாகரன், ஸ்ரீநாத்ஸ்ரீதேவன் உள்ளிட்டோர், “அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் உங்களுக்கு (நீதிபதிக்கு) வக்கீல்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.






