

சென்னை,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
முதல்-அமைச்சராக பதவிவகித்தபோதே இந்த தோல்வியை அவர் சந்தித்தது, தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்வியை சந்தித்தபோதும், தேர்தல் முடிவு வந்த அடுத்த நாள், கொளத்தூர் தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினை போட்டியிட வைக்க தி.மு.க. நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கள நிலவரம் குறித்தும் ஆராயப்பட்டு வந்தது. ஏன் என்றால், திருச்சி கிழக்கு தொகுதி முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. பெரம்பூர் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
எனவே, முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த தொகுதியில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை போட்டியிட செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் களம்காண வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளே விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்த மு.க.ஸ்டாலின், காரில் வீடு திரும்பும்போது, நிருபர்கள் அவரிடம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவிக்காத மு.க.ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார். இதனால், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் களம் இறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது.