நீர், காற்று மாசுவில் இருந்து மக்களை காப்பது அரசின் கடமை இல்லையா? ஐகோர்ட்டு கேள்வி

நீர், காற்று மாசுவில் இருந்து மக்களை காப்பது அரசின் கடமை இல்லையா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
நீர், காற்று மாசுவில் இருந்து மக்களை காப்பது அரசின் கடமை இல்லையா? ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை, ஏப்.3-

நீர், காற்று மாசுவில் இருந்து மக்களை காப்பது அரசின் கடமை இல்லையா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

சென்னை ஐகோர்ட்டில், சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் காற்று மற்றும் நீர் மாசு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் இது அதிகம் உள்ளது. குறிப்பாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் வகையில் தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுகிறது. குடிசை பகுதிகளில் மாசு அதிகம் காணப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் காற்று மற்றும் நீர் மாசு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளில் யார் யாருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை குறிப்பிடாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு நீதிபதிகள், மனு அளித்தாலும், அளிக்காவிட்டாலும், மாசு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், எல்லா பகுதிகளிலும் மாசு அதிகரித்து விட்டது. நீதிபதிகளின் அறைகளை கூட திறந்து வைக்க முடியவில்லை. காற்றில் அதிக அளவில் மாசு உள்ளதால், பொதுமக்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருகிறது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com