குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் இடம் பெறுகிறதா? ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் இரட்டை அர்த்த பாடல்களுடன் ஆபாச நடனம் இடம் பெறுகிறதா? நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை,
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த திருவிழாவின்போது காளி, சிவன், முருகப்பெருமான், புராணங்களின் கதாபாத்திரங்கள், குரங்கு, புலி உள்ளிட்ட பல வேடங்களை பக்தர்கள் போட்டுக்கொண்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.இதற்காக 48 நாட்கள் வரை விரதம் இருந்து ஊர், ஊராக சென்று காணிக்கை பெறுகின்றனர். தசரா பண்டிகையின் இறுதி நாளில் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று தாங்கள் வசூல் செய்த காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். விரதம் இருப்பவர்கள் குழுவாக சென்று ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்து கோவிலில் செலுத்துவதும் வழக்கம்.
அதிக காணிக்கை வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து இரட்டை அர்த்த பாடல்களுக்கு ஆபாசமான நடனம் ஆரம்பித்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதித்தது. அதன்பேரில் ஐகோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றும்படி உள்ளூர் போலீசாருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில் நடந்த தசரா விழாவில் தசரா குழுவினரும், போலீசாரும் கோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை. இந்த திருவிழாவில் இரட்டை அர்த்த பாடல்களும், ஆபாச நடனங்களும் இடம் பெற்றிருந்தன. எனவே இந்த ஆண்டுக்கான விழாவில் தசரா குழுவினர் ஆபாச சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களை பாடவும், ஆடவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் இரட்டை அர்த்த பாடல்களுடன் ஆபாச நடனம் இடம் பெறுகிறதா? என்பதை திருச்செந்தூர் தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






