

தர்மபுரி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கடந்த 5 ஆண்டுகளாக, ஊழல் இல்லாத அரசு துறைகளே இல்லை எனும் அளவிற்கு தமிழகத்தை தலைகுனிய செய்த தீயசக்தி திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியோடு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்ற உறுதியோடு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் கே.பி.அன்பழகன், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் நமது பாமக வெற்றி வேட்பாளர் அக்கா சௌமியா அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் நமது பாமக வெற்றி வேட்பாளர் பாடி வெ.செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் மரகதம் வெற்றிவேல், அரூர் தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
திமுக ஆட்சி காலத்தில் பழிவாங்கப்பட்ட பகுதியாக தர்மபுரி உள்ளது. எந்த வகையிலும் தர்மபுரியை வளர விடாமல் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது திமுக அரசு. நமது நாட்டின் சகோதரிகளும், தாய்மார்களும் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து தமிழக பெண்களுக்கு துரோகம் செய்துள்ளனர். 1973 ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை 525-லிருந்து 545 ஆக உயர்த்தினார்கள். ஆனால், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழகத்திற்கு கூடுதல் தொகுதிகள் வேண்டாம் என்றார். அதையே அவரது உதயநிதி ஸ்டாலினும் தற்போது செய்துள்ளார். 59 ஆக உயர்த்தபடுவதில் என்ன தவறு இருக்கிறது என முதல்-அமைச்சரால் விளக்க முடியுமா ? அற்ப அரசியல் செய்வதற்காக பெண்களின் அதிகாரத்தை பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா ?
இப்படி போலி சமூகநீதி பேசி மக்களை ஏமாற்றிய திமுகவின் நாடகத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள். அதற்கு, தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை தர்மபுரி மக்கள் மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும். தர்மபுரி தலைநிமிர, வாக்களிப்பீர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.