

சென்னை,
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலமே மோடி அரசின் துரோகம் உலகறிய நிரூபணமாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான 'Pehli Naukri Pakki' (முதல் வேலை உறுதி) திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் கூடிய ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தி அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை மோடி அரசு அப்பட்டமாக நகலெடுத்தது.
ஆனால், அந்தத் திட்டத்தின் அடிநாதத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ளாமல், வழக்கம்போல வெறும் விளம்பரத்திற்காக அவசர கதியில் "பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்" (PMIS) என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, இத்திட்டம் தொடக்கம் முதலே படுதோல்வியைச் சந்தித்து வருகிறது!
ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என வெற்று முழக்கம் விட்ட பாஜக அரசின் உண்மையான லட்சணம், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் வழியே அப்பட்டமாகத் தோலுரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மீது நாட்டின் படித்த இளைஞர்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லாத காரணத்தால், முதல் சுற்றில் 6.21 லட்சமாக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இரண்டாவது சுற்றில் 4.55 லட்சமாகவும், மூன்றாவது சுற்றில் வெறும் 3.50 லட்சமாகவும் படுவேகமாகச் சரிந்துள்ளது.
நிறுவனங்கள் அறிவிக்கும் வாய்ப்புகளில் 10 சதவீத இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதே இத்திட்டத்தின் அவல நிலையாகும். அறிவிக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு எதிராகப் பயிற்சியில் சேர்ந்தவர்களின் விகிதம் முதல் சுற்றில் வெறும் 6.9 சதவீதமாகவும் (1,27,508 வாய்ப்புகளில் சேர்ந்தவர்கள் 8,760 பேர் மட்டுமே), இரண்டாவது சுற்றில் வெறும் 6.1 சதவீதமாகவும் (1,18,948 வாய்ப்புகளில் சேர்ந்தவர்கள் 7,308 பேர் மட்டுமே) சுருங்கிப் போனது.
மூன்றாவது சுற்றில் அவசர அவசரமாக விதிகளைத் தளர்த்தியும்கூட, 1,54,366 வாய்ப்புகளில் சேர்ந்தவர்கள் வெறும் 14,620 பேர் (9.5%) மட்டுமே ஆவர். அதுமட்டுமின்றி, 3-வது சுற்றில் 1.54 லட்சம் வாய்ப்புகள் இருப்பதாகப் பெருமை பேசிய நிலையில், வெறும் 25,794 பேருக்கு மட்டுமே பணிச் சலுகைகள் வழங்கப்பட்டன என்பது இளைஞர்களை ஏமாற்றும் கண்துடைப்பு அன்றி வேறென்ன?
திட்டத்தில் சேர்ந்த இளைஞர்களில் கூட, பயிற்சியை முழுமையாக முடித்தவர்கள் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஆவர். முதல் சுற்றில் சேர்ந்தவர்களில் 42.6 சதவீதத்தினரும் (3,731 பேர்), இரண்டாம் சுற்றில் 39.4 சதவீதத்தினரும் (2,880 பேர்) மட்டுமே பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். அதாவது 60 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் விரக்தியடைந்து பயிற்சியைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இளைஞர்களின் வருகை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், திட்டக் காலத்தை 12 மாதங்களிலிருந்து 6 முதல் 9 மாதங்களாகக் குறுக்கி, வயது வரம்பைத் தளர்த்தி, உதவித்தொகையை ரூ.9,000 ஆக உயர்த்திய போதிலும் திட்டத்தின் நம்பகத்தன்மையும் தரமும் அதலபாதாளத்திற்கே சென்றுள்ளது.
தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளில் இளைஞர்களுக்கு முறையான பயிற்சிகளையோ, வேலைவாய்ப்புக்கான தொழில் திறன்களையோ அரசு உறுதி செய்யவில்லை என்பதற்கு லக்னோவைச் சேர்ந்த மோஹித் போன்ற பட்டதாரி இளைஞர்களின் அனுபவங்களே சான்றாகும்.
பிபிஏ (BBA) முதல் ஆண்டு பயிலும் மோஹித் என்ற மாணவருக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட பயிற்சி என்ன தெரியுமா? பெட்ரோல் பங்க் வாசலில் நின்றுகொண்டு, வாடிக்கையாளர்களைச் செல்போன் செயலி மூலம் பணம் செலுத்தக் கூறிப் பரப்புரை செய்ய வைத்ததுதான்! எந்தவொரு அலுவலகப் பணியோ அல்லது தொழில் திறன்களோ கற்றுத்தரப்படாமல் கூலி ஆட்களைப் போலப் பயன்படுத்தப்பட்டதால் அவர் விரக்தியடைந்து வெளியேறியுள்ளார்.
இதேபோல ராஞ்சியைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்ப டிப்ளமோ படித்த சுனில் என்ற இளைஞருக்கு அலுவலகத்தில் பயிற்சி அளிக்காமல், கிராமம் கிராமமாகச் சென்று வங்கிக் கடன் வசூலிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்தி வீணடித்துள்ளனர்!
ஒரு முற்போக்கான திட்டத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ளாமல், பெயரளவுக்கான நகல் திட்டங்களை உருவாக்கி இளைஞர்களின் உழைப்பைச் சுரண்டுவதுதான் பாஜகவின் சாதனையா? "கல்வியும் திறனும் தந்து நாட்டின் எதிர்கால இளைஞர்களைத் தொழில் வல்லுநர்களாக மாற்ற வேண்டும்" என்ற ராகுல் காந்தி அவர்களின் நோக்கம் எங்கே; கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர் பிடிப்புக்கும், கடன் வசூலுக்கும் படித்த பட்டதாரிகளை மலிவு விலை தொழிலாளர்களாகத் தள்ளிவிடும் மோடி அரசின் எண்ணம் எங்கே?
இதைத்தான் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து உரக்கச் சொல்லி வருகிறார். இன்று கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலமே மோடி அரசின் துரோகம் உலகறிய நிரூபணமாகியுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.