'பி.எம். ஸ்ரீ' திட்டத்துக்கான நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குகிறதா? - அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு விளக்கம்


பி.எம். ஸ்ரீ திட்டத்துக்கான நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குகிறதா? - அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு விளக்கம்
x

கோப்புப்படம் 

‘பி.எம். ஸ்ரீ' பள்ளிகளுக்கு முழு நிதியும் மத்திய அரசு வழங்குகிறது என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

'பி.எம். ஸ்ரீ' திட்டத்துக்கான நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

'பி.எம். ஸ்ரீ' நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பங்கிட்டு கொள்கின்றன. (திட்டத்தின் மொத்த தொகை ரூ.27,360 கோடி. மத்திய அரசு பங்கு ரூ.18,128 கோடி)

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். இந்த திட்டத்துக்கான மத்திய அரசின் 60 சதவீத பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022-23 முதல் 2026-27 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

'பி.எம். ஸ்ரீ' பள்ளிகளுக்கு முழு நிதியும் மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story