முதல்-அமைச்சர் சென்றிருப்பது அரசு பயணமா? இன்ப சுற்றுலாவா? - பாஜக கேள்வி

முதல்-அமைச்சர் சென்றிருப்பது அரசு பயணமா? இன்ப சுற்றுலாவா? என்று பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு மாநில முதல்-அமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணப்படுவது சாதாரணமே. ஆனால், இதற்கு முன்பு துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். இதில், மார்ச் 2022 துபாய் பயணத்தில் மட்டும் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்கிறார்கள்.
இதில் இதுவரை முதலீடுகள் தமிழகத்துக்கு எதுவும் வரவில்லை. அதேபோல், சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தின் போது ரூ.1,342 கோடி, ஸ்பெயின் பயணத்தின் போது ரூ.3,440 கோடி, அமெரிக்கப் பயணத்தின் போது ரூ.7,616 கோடி ரூபாய் முதலீடுகள் வந்ததாக வெறும் வாய் கணக்கு போட்டு பேசுகிறார்கள். இந்தப் பயணத்தின் மூலம் தமிழகத்துக்கு ஈர்த்துவரப்பட்ட முதலீடுகள் என்ன என்ற வெளிப்படை தகவல்கள் எதுவுமே இல்லை.
ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்லப்பட்ட நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களைத் தவிர வேறெந்த நிறுவனங்களையும் தமிழகம் அழைத்து வந்து தொழில் தொடங்க வைக்க முழுமையாகத் தவறிவிட்டது திமுக அரசு. திமுக ஆட்சியில் ரூ.10.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துவிட்டோம். இதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கானல் நீர் கணக்கு பேசும் அவர்கள் இதுவரை அதில் உறுதியாக கொண்டுவரப்பட்ட முதலீடுகளைக் கேட்டால் வாய் திறக்க மாட்டார்கள். காரணம் அதில் பத்து சதவிகித முதலீடுகள் கூட இங்கே வரவில்லை என்பதே எதார்த்தம்.
மீண்டும் ஐந்தாவது முறையாக வெளிநாடு பயணம் சென்றுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தப் பத்து நாள் பயணத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே தொழில் முனைவோர்களைச் சந்திக்கத் திட்டம். மீதமுள்ள அனைத்து தினங்களிலும் தனது மருமகன் சபரீசன் முதல்-அமைச்சரின் தந்தை பெயரில் உருவாக்கிய இருக்கை தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஈ.வெ.ராமசாமி பெயரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.
ஜெர்மனியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, லண்டனில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு. அங்கே அவர்களின் கட்சி கொள்கை தலைவர்களின் விழாக்களில் பங்கேற்பது என்று மக்களின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களின் வரிப்பணத்தில் அரசு பயணம் செய்வதா இல்லை இன்ப சுற்றுலா செல்வதா? இல்லை இதற்கு முன்பு அப்படி ஒன்று செலவாகவில்லை என்று சொல்லும் கும்பலுக்காகவே ஒரு பட்டியலை சொல்கிறேன்.
* சிங்கப்பூர் பயணம்: ரூ.26.84 லட்சம்
* ஜப்பான் பயணம்: ரூ.88.06 லட்சம்
* ஸ்பெயின் பயணம்: ரூ.3.98 கோடி
* அமெரிக்கா பயணம்: ரூ.1.99 கோடி
என மொத்தம் ரூ.7.12 கோடி ரூபாய் செலவியிருக்கிறது. இதில் குடும்பத்துடன் சென்ற துபாய் பயணத்தைச் சேர்த்தால் செலவு பத்து கோடியை தாண்டும். இன்னும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடங்கி மற்ற திமுக அமைச்சரவை கும்பலின் வெளிநாட்டு பயண வரவு செலவை கணக்கிடல் அது ரூ.50 கோடி ரூபாயை தாண்டும். அரசு ஊழியர்கள் தொடங்கி மக்கள் அனைவரும் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்லும் முதலீடுகளை ஈர்த்துவர வக்கற்ற அரசு மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வது சரியா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






