ஆரம்பமாகிறதா “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை? - நயினார் நாகேந்திரன்

எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான் கொடி கட்டிப் பறக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஆரம்பமாகிறதா “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை? - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது

நியமனத்தில் ஊழல்

தவெக ஆட்சியில் லஞ்சத்தின் அடிப்படையில் தான், அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் நடப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பரபரப்பு அடங்கும் முன்னரே, அரசு சார்பில் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர்களுக்கான தேர்வில், 2006-இல் பிறந்த ஒருவரும், பெயரே இல்லாத ஒருவரும் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு வேலைகளை தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும் ஆளும் அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

“நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்” என்று வசனம் பேசிய விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தவெகவினரின் மாமூல் அராஜகம், டெண்டர் விடுவதில் முறைகேடு, உதவிப்பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் ஊழல், வேண்டியவருக்கு அரசு பதவிகள் கொடுப்பது என எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான் கொடி கட்டிப் பறக்கின்றன. அரசு வேலையை நம்பி பல கனவுகளுடன் காத்துக்கிடக்கும் பட்டதாரிகளின் நம்பிக்கைகள் இப்படி சுக்குநூறாக உடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

விசாரிக்க வேண்டும்

எனவே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com