

சென்னை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த ஆறு மாதங்களாக, காரைக்குடியில் உள்ள தாய் வீட்டில் தங்கி, அருகில் உள்ள முத்துப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
கடந்த செப்டம்பர் 17-ந்தேதி, உமா மகேஸ்வரிக்கு, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தமிழக அரசின், 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில், உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்க, கடந்த, 1-ந்தேதி, 'டோக்கன்' வழங்கப்பட்டது.
ஆனால், அவர் சமர்ப்பித்த ஆதார் அட்டையில், முகவரி மைசூர் என குறிப்பிட்டிருந்ததால், கணினியில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், உமா மகேஸ்வரிக்கு மோதிரம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக, பொது சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தில், உமா மகேஸ்வரியின் ஆவணங்கள் அடிப்படையில், அவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. பிரசவத்திற்காக, தன் தாயின் இல்லத்திற்கு வந்தவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில், செப்டம்பர் 17-ந்தேதி, அறுவை சிகிச்சை வழியே குழந்தையை பெற்றேடுத்தார்.
உமா மகேஸ்வரிக்கு, அனைத்து மருத்துவ சிகிச்சைகளும், கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்கு பிந்தைய காலத்திலும், போதுமான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது. அவர், செப்டம்பர் 22-ந்தேதி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர், 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்' கீழ் பயன் பெற இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.