

திருநெல்வேலி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின்போது திமுக நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்தார். என்ன நடந்தாலும், திருநெல்வேலி தொகுதியில் திமுக வெல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் திமுக நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என்று கூறினார்.
இந்த திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் 2001-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நயினார் நாகேந்திரன் 5 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 2001, 2011, 2021 ஆகிய 3 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2006, 2016 ஆகிய சட்டசபை தேர்தலிலும், 2024-ம் ஆண்டு நடந்த எம்.பி. தேர்தலிலும் தோல்வி அடைந்தார்.
இதனிடையே நயினார் நாகேந்திரன் தொகுதி மாற போவதாக தகவல் வெளியானது. சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலியில் இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை முடிக்கட்டும். நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம் வருவார்கள். ஓ.பன்னீர்செல்வம் நல்லவர்தான். கூட்டணி குறித்து இதுவரையில் நான் அவரிடம் பேசவில்லை. தேவைப்பட்டால் கண்டிப்பாக பேசுவேன். 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய 5 தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். வரும் சட்டசபை தேர்தலிலும் திருநெல்வேலி தொகுதியில்தான். இவ்வாறு அவர் கூறினார்.