தமிழ்நாட்டில் 'ரெஸ்டோ பார்' தொடங்க திட்டமா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை கொண்டு வருவதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.
அமைச்சர் விக்னேஷ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்மாநிலங்களில் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்யை கேரள அரசின் உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கடந்த 15-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் உடனிருந்தார்.

இந்த ஆலோசனையில், கேரளாவில் 'ரெஸ்டோ பார்'கள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்று அம்மாநில மந்திரி ரமேஷ் சென்னிதலா கருத்து தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் 'ரெஸ்டோ பார்' களை கொண்டு வருவதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் உடனடி பரிசீலனையில் இறங்கியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியில் 'ரெஸ்டோ பார்'களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, 'உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக 'டாஸ்மாக்' நிர்வாகம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் 'டாஸ்மாக்' நிர்வாகம் வெளியிடவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com