தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா...!

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - அ.தி.மு.க.வில் பழைய நிலையே தொடரும்: சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா...!
Published on

சென்னை

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் கோர்ட்டை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதில் ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கில் இருந்து விலகினார்.

தனி நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கில் இருந்து விலகியதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. இரண்டு நாடகளாக நடந்த இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருதரப்பு வாதங்கலையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கபட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க இருக்கிற நிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டுக்கு வந்துள்ளனர்.

அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஆலோசித்து நடத்தி வருகிறார். அதேபோல் எடப்பாடி தரப்பில் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கபட்டது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கட்சியில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் சட்டவிதிகளின்படியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நிலை என்பது கிடையாது, 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐகோர்ட்டின் தீர்ப்பை விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம், மேல்முறையீடு குறித்தெல்லாம் கட்சிதான் முடிவு செய்யும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com