ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களுடன் ஜெர்மனியில் ஒப்பந்தமா? - விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களோடு ஜெர்மனியில் ஒப்பந்த நாடகம் போடப்பட்டுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து முதலீடுகளை குவித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், "தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களோடு ஜெர்மனியில் ஒப்பந்த நாடகம்" போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது திரிக்கப்பட்ட தகவல். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 அன்று ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.3,819 கோடி முதலீடுகளை உறுதி செய்தார். இதில் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிடப்பட்ட நார்-பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம் மற்றும் ஈபிஎம்-பாப்ஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களுடன் முன்னரே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மீண்டும் முதலீடுகள் செய்து விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முன்வந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.






