அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? - இளங்கோவன் கேள்வி

அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? என்று தெரியவில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? - இளங்கோவன் கேள்வி
Published on

சென்னை,

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு கொடுக்கவேண்டிய மாநில அரசு தன்னுடைய பணியில் இருந்து தவறிவிட்டதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் தமிழ்நாடு வருகையின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டிற்கு திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

பிரதமர் மாநிலத்திற்கு செல்லும்போது அடிப்படை ஏற்பாடுகளை மாநில அரசு செய்யும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஒன்றிய அரசின் அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு வந்து அவர்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள். மாநில காவல்துறைக்கு எந்த பணியும் இருக்காது.

முழு பொறுப்பும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவர்கள் கைவசம் எடுத்துக்கொண்டால் முதல்-அமைச்சர் கூட உள்ளே நுழைய முடியாது. அந்த அளவிலே தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்தது.

அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? என்று தெரியவில்லை. அவர் தான் உள்துறை மந்திரி. அவர் (அமித்ஷா) மீது உள்ள கோபத்தை இங்கே காட்டுகிறாரா? என்று புரியவில்லை.

ஏற்கனவே இவர் (அண்ணாமலை) ஒரு போலீஸ் அதிகாரி. இவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை என்றால் இவர் என்ன பணியாற்றினார் என்றும் எனக்கு புரியவில்லை.

காலம் தாழ்த்தி கேட்பது மட்டுமல்ல... இந்த கேள்வியே எழக்கூடாது. பிரதமர் வருகிறார் என்றால் டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள், தமிழ்நாடு காவல்துறையை தங்கள் உதவிக்கு பயன்படுத்திக்கொள்வார்களே தவிர அவர்களை தாண்டி எந்த தவறும் நடந்துவிட முடியாது.

10 நாட்கள் முன்னதாகவே வந்து எந்திரங்களையெல்லாம் சரிபார்த்து, அவை சரியில்லை என்றால் உடனே மாற்றி அவற்றை சரிசெய்வது தான் டெல்லியில் இருந்து வருகிற பிரதமரின் பாதுகாப்பு அலுவலகர்களுடைய பணி.

இப்போது இவர் (அண்ணாமலை) குற்றம் கூறினார் என்றால் அவர் ஒன்றிய உள்துறையை குற்றம் கூறுவதாக பொருளே தவிர தமிழ்நாடு அரசை குற்றம் கூறுவதாக பொருள் அல்ல. எனவே தான் எனக்கு இந்த சந்தேகம் வருகிறது. ஒருவேளை அமித்ஷாவுக்கும் அவருக்கும் (அண்ணாமலை) எதாவது சண்டையா என்று சந்தேகம் வருகிறது.

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தான் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்நாடு அரசு அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவார்கள். தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்கள் கூறிய வேலையை செய்வார்கள்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com