

அவர் தனது பேட்டியில், சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தை சமாளிக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தவறி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசுகையில், அந்த பணிகள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில் 30 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் தி.மு.க. அரசுதான் தொடர்ந்து அந்த பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே, தங்களது தோல்வியை மறைக்கவே முதல்வர் இவ்வாறு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. இரட்டை தலைமைக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல் மற்றும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், இரு பெரும் தலைவர்களுக்குள்ளும் எந்த மனக்கசப்பும் இல்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளை இருவரும் தனித்தனியே பார்த்ததில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். சசிகலா அரசியல் குறித்து பேசுகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்குள் எந்த குழப்பத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வராதது ஏன்?, முல்லை பெரியாறு விவகாரம்?, வன்னியர் இட ஒதுக்கீட்டில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு? குறிப்பிட்ட சாதியினரின் பிடியில் கட்சி சிக்குகிறதா?, சர்ச்சையை ஏற்படுத்தும் இல்லம் தேடி கல்வி திட்டம் உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.