

சென்னை,
தமிழ்நாட்டை அசாதாரணச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதியினருக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14) மற்றும் பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இது ஆட்சியா?; அலங்கோலமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?
தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது.
எவ்வித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியிலிருக்கும் தவெக அரசு, எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் தானே இதுபோன்ற கொலை குற்றங்கள் தொடர்கின்றன! முதலமைச்சர் விஜய் அவர்கள், மக்கள் மீது கருணைகாட்டி எதேனும் வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்.
வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது; புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.