தூத்துக்குடிக்கே இப்படியொரு நிலையா? குஜராத்தில் இருந்து 40 ஆயிரம் டன் உப்பு வருகை

தூத்துக்குடிக்கு 40 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் தென்கோடியில் உள்ள தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. இந்தத் தொழிலில் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பருவம் தப்பிய மழை, அசாதாரண வானிலை மாற்றம் உள்ளிட்டவைகளால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி தூத்துக்குடியில் இன்னும் முழு வீச்சில் தொடங்கப்படவில்லை. அங்கு உப்பு உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலையும் ஒரு டன் (ஆயிரம் கிலோ) ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது.
இந்த நிலையில், உப்பு உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கும் குஜராத்தில் ஒரு டன் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 என்ற விலையில் கிடைக்கிறது. எனவே, தூத்துக்குடிக்கு 40 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரம் டன் உப்பு கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைத்துதர அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறோம். அரசு அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.






