

சென்னை,
சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க முதல்-அமைச்சர் விஜய் தயாரா? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இன்றைய முதல்-அமைச்சர் இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல எதுவுமில்லாத காரணத்தால் அவர் பிறப்பதற்கு முன்பு சொல்லபட்ட குற்றச்சாட்டை எடுத்து வந்து இப்போது பேசி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த 116 நாள் ஆட்சியில் நடைபெற்றுள்ள கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி ஆதாரங்களோடு நேருக்கு நேராக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவை எதற்கும் பதில் அளிக்க யோக்கியதை இல்லாமல், தைரியமில்லாமல், செத்த பாம்பை அடிப்பது போல முடிந்து போன சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி உள்ளார். சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு தெரியுமா?
சர்க்காரியா கமிஷன் தொடர்பான உண்மைகளை தற்போதைய சூழ்நிலையில் மக்களுடன் பகிர்வது என்னைப் போன்றவர்களின் கடமையாகும். அவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை. சர்க்காரியா கமிஷன் எத்தகைய சூழ்நிலையில் நடைபெற்றது என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவசர நிலை பிரகடனத்தின் போதுதான் அது நடந்தது. ஆனால், இன்றிருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்றைக்கு இல்லை. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது பேச்சுரிமை இல்லை. பத்திரிகை சுதந்திரமும் இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியாது. எந்தவொரு செய்தியும் பத்திரிகைகளில் வராது. மறுப்புகளும் வெளியிடப்படாது.
அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆணையத்தை அமைத்த இந்திரா காந்தி கூட, 1980-ல் கடற்கரைக்கு வந்து, அவசர நிலையின்போது தனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டதாகக் கூறி கலைஞருக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இது பத்திரிகை உலகத்திற்கும், அரசியலை அறிந்தவர்களுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு, அரசியல் விவரமற்றவர்களுக்கு இது தெரியாது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அவருக்கு உண்மையில் தெம்பும் திராணியும் இருந்தால், அவர் வார்த்தைகளில் ஏதேனும் உண்மை இருந்தால், எங்களுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்கத் தயாரா? வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் விவாதிக்க தயார், அவர் தயாரா? உதாரணமாக, புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். தான் அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். ஆனால் எந்த வழக்கும் போட முடியவில்லை .
கலைஞர் அல்லது திமுக ஏதேனும் தவறு செய்திருந்தால் எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர். அரசு அத்தகைய எந்த வழக்கையும் தொடரவில்லையே ஏன்? நாங்கள் அக்டோபர் 1977-ல் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டினோம். அதனால் வழக்கு பதியப்பட்டு கலைஞருடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டோம். இந்த வழக்கில் எப்படியாவது எங்களை உள்ளே வைக்க வேண்டும் என ஐகோர்ட்டில் எம்.ஜி.ஆர். மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட்டில் நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றார். 1977-ல் நாங்கள் காட்டிய கருப்புக்கொடி தொடர்பான வழக்கு பிப்ரவரி 1996-ல்தான் முடிந்தது. இந்த ஒரு உதாரணம் போதாதா? முழு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
முதல்-அமைச்சர் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசி உள்ளார் அவ்வளவே. தமிழ்நாட்டின் தரம், மாண்பு, பாரம்பரியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் அனைத்தும் இன்று மாண்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீறப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கருப்புக் கொடிப் போராட்ட வழக்கிற்காகவே அன்றைய அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றபோது, கலைஞர் அல்லது மற்றவர்கள் உண்மையில் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்களா? இதை தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமலேயே விஜய் பேசுகிறார்.
இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் இதையெல்லாம் பேச வேண்டிய நேரம் இது. ஆனால், முதல்-அமைச்சர் விஜய் இப்பிரச்சினைகளை திசைதிருப்பும் வேலையைச் செய்கிறார்; இதுவொரு "திசைதிருப்பல்" தந்திரமாகும். இதனால், மக்கள் பேசப்போவதெல்லாம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சை பற்றி மட்டும்தான். தொலைக்காட்சியில், சமூகவலைதளங்களில் பார்ப்பவர்களுக்கு த.வெ.க. உறுப்பினர் கொலை மற்றும் அமைச்சரின் காரால் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய பெரிய செய்திகள் எதுவும் வெளிவராது.
1989 சட்டமன்ற நிகழ்வு குறித்தும் - ஜெயலலிதா குறித்தும் விஜய் பேசுகிறார். அதைப் பற்றிப் பேச அவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை. ஏனெனில், அந்நிகழ்வு நடக்கும்போது ஜெயலலிதா உடனிருந்த திருநாவுக்கரசு அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பலமுறை பத்திரிகைகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆக திசை திருப்புகிற அரசியல் செய்கிறார் விஜய்.
ஆணித்தரமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல், திராணி இல்லாமல் இன்றைக்கு ஒரு கபட நாடகத்தையும், திசைதிருப்பும் முயற்சியையும் சட்டசபையிலே அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எல்லாம் முதல்-அமைச்சர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். சும்மா யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததை வைத்து பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.