

சென்னை,
மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் பருவமழையினை முன்னிட்டு இன்று கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் , பருவமழையினை முன்னிட்டு, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இன்று (01.98.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பருவமழையினை முன்னிட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்கா அருகில் உள்ள கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும், அதில் உள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டி, மோட்டார் அறையினையும் பார்வையிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சியின் 19 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 5 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 24 சுரங்கப் பாதைகள் உள்ளன. இவற்றில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மழையினை முன்னிட்டு, சுரங்கப்பாதைகளில் மழை நீர்த் தேக்கமின்றியும் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறின்றி செல்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் மோட்டார் அறையினை சரி பார்த்து தயார் நிலையில் வைத்திடவும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து வட்டார துணை ஆணையர்கள், மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.