ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மோடி அரசுக்கு விசிக விடுத்த கோரிக்கை


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்:  மோடி அரசுக்கு விசிக விடுத்த கோரிக்கை
x

ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். இந்திய மத்திய அரசு இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஈரானின் அணு சக்தி சோதனைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீதும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் மீதும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது இதில் ஈரான் நாட்டைச்சேர்ந்த முக்கியமான அணு விஞ்ஞானிகளும், ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் அத்தகைய வலிமையை ஈரான் பெற்றுவிடக்கூடாது எனத் தடுப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவ நடவடிக்கையை ஐநாபொதுச் செயலாளர் கண்டித்துள்ளார். ரஷியா சீனா, சவுதி அரேபியா என உலகின் பலவேறு நாடுகளும் கண்டித்துள்ளன. ஆனால் இந்தியா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மௌனம் காக்கிறது. இதுவரை இந்தியா கடைப்பிடித்து வந்த அயலுறவுக் கொள்கையில் மோடி அரசு ஏற்படுத்திய மாற்றம் காரணமாகவே இந்தியா பாகிஸ்தான் போரின் போது எந்த ஒரு நாடும் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை.

மோடி அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது. இப்போதும் இஸ்ரேலை கண்டிக்காமல் மௌனம் காப்பதன் மூலம் மோடி அரசு மீண்டும் தவறிழைக்கிறது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியிருககும் தாக்குதல் மூன்றாவது உலக யுத்தத்துக்கு வழி கோலக் கூடும். அது மட்டுமல்லாமல் உலக அளவில் அது கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அந்த நெருக்கடியில் இந்தியாவும் பாதிக்கப்படும்.

எனவே, இந்தப் பிரச்சனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்தியா இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story