புதுச்சேரியில் இருந்து மது எடுத்துவரும் விவகாரம்: தமிழக அரசு முறையீடு

அரசு உரிமம் பெற்ற மதுபானங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும் என்று அரசு வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து மது எடுத்துவரும் விவகாரம்: தமிழக அரசு முறையீடு
Published on

சென்னை,

கடலூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்கள் விலை குறைவு என்பதால், மதுபிரியர்கள் அங்கு சென்று மது குடித்து விட்டு வருகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். அவ்வாறு மதுபாட்டில்களை கடத்தி வருவோர் மீது கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விருத்தாசலம் அருகே காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு என்பவர், புதுச்சேரியில் இருந்து 750 மில்லி லிட்டர் 2 பாட்டில், 180 மில்லி பாட்டில் என்று மொத்தம் 3 பாட்டில்களில், 1.680 மில்லி லிட்டர் அளவில் மதுவை எடுத்து வந்தார். இந்த மதுபாட்டில்களுடன் கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடி பகுதிக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த கடலூர் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வல்லரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது 4.5 லிட்டர் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆனால் மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி லிட்டர் தான் மதுவைத்துள்ளார் என்று கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்த ரவிட்டார். இதையடுத்து புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் வரை மதுவாங்கி வரலாம் என்ற தகவல் பரவியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை ரத்து செய்தது குறித்து விளக்கம் கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. "தனி நபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் விலக்கு என்பது புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது, நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அரசு உரிமம் பெற்ற மதுபானங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும் என்று அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டை நாளை விசாரிக்க வேண்டும் என கோரப்பட்ட நிலையில், அதனை ஏற்று மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com