

கோவை,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தனியார் பள்ளிகளில் கட்டண முறையை வெளிப்படைத்தன்மையுடன் வைக்க வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தியும், சில இடங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை கண்காணிக்க, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் அனுமதி பெற்று, கல்வியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்று புகார்கள் வருகின்றன. பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்குத்தான் நான் முதல் கையெடுத்து போட்டேன். ஆனால், கழிப்பறைகளை கட்டுவதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
கழிப்பறைகளை பராமரிக்க ஒரு அரசு பள்ளிக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கே 30 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கிறது என்ற சூழல் இருக்கும்போது, தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம், கழிப்பறை சுத்தம் செய்யும் உபகரணங்கள் ஆகிய செலவுகளை எப்படி செய்ய முடியும்? சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கழிப்பறைகளை பராமரித்து வருகிறார்கள்.
ஒரு கழிப்பறை எவ்வளவு முக்கியம் என்றால், வகுப்பறை இல்லாத கழிப்பறைக்கு பயன் இருக்கிறது, ஆனால் கழிப்பறை இல்லாத வகுப்பறைக்கு எந்த பயனும் கிடையாது. எனவே, தமிழக முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று, பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்புக்கான நிதி ஒதுக்கிட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.