ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது -ஐகோர்ட்டு வேதனை

75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது என்றும் ஐகோர்ட்டு வேதனை கருத்துகளை தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது -ஐகோர்ட்டு வேதனை
Published on

சென்னை,

சென்னையில் காவலர் குடியிருப்பில் வசித்த போலீஸ்காரரான மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், வீட்டை காலி செய்யும்படி கடந்த 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது.

ஆனால், அண்மையில்தான் அவர் வீட்டை காலி செய்துள்ளார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "கடந்த 2014-ம் ஆண்டே வீட்டை காலி செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும், மனுதாரர் அண்மையில்தான் வீட்டை காலி செய்துள்ளார். அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், காவல்துறை தனது நன்மதிப்பை இழக்க நேரிடும்" என்று கருத்து தெரிவித்தார்.

அரசு முத்திரை கூடாது

மேலும், "காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். உயரதிகாரிகளின் வாகனங்களில் உள்ள கருப்பு ஸ்டிக்கர்களை (கூலிங் பிலிம்) அகற்ற வேண்டும். சொந்த வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், "19 ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். சர்வதேச சதுரங்க போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டதால், ஆர்டர்லி விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டது. அண்மையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டில், ஆர்டர்லி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று கூறினார்.

மக்கள் சேவகர்கள்

இதையடுத்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி கூறியதாவது:-

நமது நாட்டில் குடிமக்கள் தான் உண்மையான ராஜா, ராணிகள். நாம் (அதிகாரிகள்) அனைவரும் மக்கள் சேவகர்கள். நாடு சுதந்திரமடைந்து 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடப்போகிறோம். ஆனால் இன்னமும் ஆங்கிலேய காலத்து ஆர்டர்லி அடிமை சாசன முறை தொடருவது வெட்கக்கேடானது.

இந்த விசயத்தில் முதன்மைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தால் மட்டும் போதாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் போலீசார் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நன்மதிப்புடன் திகழ வேண்டும்.

அவலம்

ஆர்டர்லிகளாக இருப்பவர்கள் இதுதொடர்பாக எதுவும் பேசமாட்டார்கள். துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடம் இருந்தோ, டி.ஜி.பி.யிடம் இருந்தோ வருவதில்லை.

ஆர்டர்லிகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவை முறையாக பின்பற்றாத ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட நேரிடும். தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்புடையதல்ல.

மக்கள் அதிகாரம்

இந்த விசயத்தில் காவல்துறை உயரதிகாரிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

எனவே இந்த வழக்கில் டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 18-ந்தேதிக்குள் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்,

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com