

சென்னை,
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான், நாளை நீங்களும் முதல்வராகலாம். இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறினார்.
அவரைதொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதுமே புரட்சி தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். மக்களுக்காக பல திட்டங்களைக் கொடுத்து அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை. தொண்டனின் உழைப்பு, சிந்திய ரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அம்மாவின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் புரட்சி தலைவி அம்மா. எத்தனை இயற்கை சீற்றங்களாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்றது அதிமுக அரசு. மாநில வருவாய் நிதியில் 60% ஏழை மக்களின் பயன்பாட்டிற்கு செலவிட்டவர் ஜெயலலிதா. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதனை செய்து கொடுப்பது அதிமுக அரசு.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் திமுக கையெழுத்திட்டது. முதலமைச்சர் எடப்பாடி தஞ்சையை வேளாண் மண்டலமாக அறிவித்தார். மத்தியில் உள்ள ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் எய்ம்ஸ் வந்து சேர்ந்திருக்கிறது
பெண்கள் நாட்டின் கண்கள் என கருதிய புரட்சி தலைவி ஜெயலலிதா, பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு. தமிழகத்திற்கு பல்வேறு நல்லதிட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம். மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.