

சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “இந்த உத்தரவு வரவேற்கத்தது. இது குறித்து நீண்ட காலமாக பேசிக்கொண்டிருந்தார்கள், தற்போது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது, வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், “திரைத்துறையில் இருந்து ஒரு பிரபலமான நடிகர் அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், “அவரை திரைப்பட நடிகராக மட்டும் பார்க்கக்கூடாது. வேறு கடமைகள் அவருக்கு இருக்கின்றன. எந்த துறையில் இருந்து வேண்டுமானாலும் வரலாம். எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதல்-அமைச்சராக வந்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.