நாட்டின் தொடர் வளர்ச்சிக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது - ஜி.கே. வாசன்

நாட்டின் தொடர் வளர்ச்சிக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் 2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய நிதி மந்திரி அவர்கள் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புதிய வரலாறு படைத்திருக்கிறார். பட்ஜெட்டில் வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், மற்றும் ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அதாவது 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வேளாண் திட்டம், 7.5 கோடி சிறு குறு தொழில் முனைவோர் பயனடையும் வகையில் புதிய திட்டம், நகரங்கள் மறுசீரமைப்புக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு, அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படுவது, பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படுவது, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் 40 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித்தரப்படுவது, மாநிலங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுவது, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி பிடித்த உச்சவரம்பு ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டின் 6 முக்கிய அம்சங்களில் அடங்கியுள்ளது.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது, நன்றிக்குரியது. பா.ஜ.க வின் 3வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் வளரும் இந்தியா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மக்கள் நம்பிக்கை வைத்து பா.ஜ.கவை ஆட்சியில் அமரவைத்ததை பூர்த்தி செய்யும் வகையில் 2025-2026 க்கான மத்திய பட்ஜெட் அமைந்திருக்கிறது.

எனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் தொடர் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் பாரதப் பிரதமர் அவர்களையும், பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் மத்திய நிதியமைச்சர் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com