

சென்னை,
மீனவர்கள் கடலில் காணாமல் போவதும், பின்னர் சடலமாக மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் தம்பிராஜின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்.
இரவு 8 மணியளவில் தம்பிராஜ் கடலில் தவறி விழுந்தபோதே மீன்வளத்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சக மீனவர்களே மறுநாள் அவரது உடலை மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
உயிருக்குப் போராடிய மீனவரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் கடலில் காணாமல் போவதும், பின்னர் சடலமாக மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
உயிரிழந்த மீனவர் தம்பிராஜின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்களில் மீனவர்களை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.