ஐகோர்ட்டு நீதிபதி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்ததல்ல - இந்திய கம்யூனிஸ்டு கட்சி

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டிய நீதிபதி மதச்சார்போடு பேசி வருகிறார்.
ஐகோர்ட்டு நீதிபதி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்ததல்ல - இந்திய கம்யூனிஸ்டு கட்சி
Published on: 

சென்னை

ஐகோர்ட்டு நீதிபதி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்ததல்ல என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்து உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள செய்தியில், ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதித்துறை நெறிகளுக்கும், மாண்புகளுக்கும் முரணாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றும்பொழுது அரசியல் கட்சித்தலைவர்களை விமர்சிப்பது, அரசியல் கட்சித்தலைவர் போல் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டிய நீதிபதி மதச்சார்போடு பேசி வருகிறார். அவரது கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.

நூலக முறைகேடுகள்

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசனுக்கு எதிராக தனி நபர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி சுவாமிநாதன், இத்தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய, மகாபெரியவா புத்தகத்தின் அனைத்து தொகுதிகளையும், பெரியார் அறிவுலக நூலகத்தின் அனைத்து அடுக்குகளிலும் இடம் பெறச்செய்ய வேண்டும்.

அப்படி செய்தால்தான் இந்த பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். பாவபுண்ணிய கோட்பாடு என்பது மூடநம்பிக்கை என்பதோடு அதில் வர்ணாசிரம சார்பும் வெளிப்பட்டுள்ளது.

நீதியரசர்களின் வேலை

அவரது கருத்தை விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி., “நூலகக்கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்கு புண்ணியம் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சொல்வது ஜோதிடர்களின் வேலை” என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் எரிச்சலுற்ற நீதிபதி, சு.வெங்கடேசன் மீது தனிநபர் தாக்குதலை நடத்தியுள்ளார். நீதிபதி சுவாமிநாதன் அவர்களின் இத்தகைய கருத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கண்டிப்பதோடு, அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்து உள்ளது.

X