காங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசன் கட்சி இணைப்பா? மக்கள் நீதி மய்யம் இணையதள பக்கத்தில் தகவல் வெளியானதால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசன் கட்சி இணைக்கப்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசன் கட்சி இணைப்பா? மக்கள் நீதி மய்யம் இணையதள பக்கத்தில் தகவல் வெளியானதால் பரபரப்பு
Published on

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைப்பு நிகழ்ச்சி டெல்லியில் காந்தியின் நினைவு தினமான வருகிற 30-ந்தேதியன்று நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுப்பதற்காக மக்கள் நீதி மய்யத்தை தொடர்ந்து, மற்ற கட்சிகளும் தங்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதள பக்கத்தில் வெளியான இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளத்தை மர்ம ஆசாமிகள் 'ஹேக்' (முடக்கம்) செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, சில மணி நேரத்தில் மர்ம ஆசாமிகளிடம் இருந்து இணையதளத்தை மக்கள் நீதி மய்யத்தினர் மீட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கட்சியின் இணையதள பக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி உடனான இணைப்பு செய்தி தொடர்பான தகவல் உடனடியாக அகற்றப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ' ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டுவதை வைத்தும், ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்ததை வைத்தும் மர்ம ஆசாமிகள் 'ஹேக்' செய்து வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியுடன், மக்கள் நீதி மய்யத்தை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அது ஒருபோதும் நடக்கவும் செய்யாது. கட்சியின் இணையதளம் 'ஹேக்' செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளோம்' என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com