

சென்னை,
சட்டசபை வளாகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-கவர்னர் உரை, தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதை தெளிவாக விளக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக உருவாக்குவதற்கும் தேவையான திட்ட வரைபடம் இந்த கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தது. தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன. கவர்னர், அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாக வாசித்துள்ளார்.
இதனை சிலர் த.வெ.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேயான உறவு என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில், பா.ஜனதாவுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில்தான் நெருக்கமான உறவு இருப்பதாக பல நிகழ்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, சிலர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைப்புகள் அனுப்பிய கோப்புகள் பல நாட்களாக கவர்னரிடம் நிலுவையில் உள்ளன. குறிப்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் தொடர்பான கோப்புகள் இன்னும் கவர்னர் ஒப்புதல் தரவில்லை.
கவர்னர் உரையில் இடம்பெற்ற பல திட்டங்கள் தற்போதைய அரசால் உருவாக்கப்பட்டவையே. தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தியே இந்த அரசு செயல்படும். தமிழக நலனில் எந்த சமரசத்தையும் முதல்-அமைச்சர் செய்யமாட்டார். தற்போதைய அரசு எந்த குற்றமும் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு வழங்கியுள்ளது. யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அரசின் நிலைப்பாடு. மின்வாரியம் தினசரி எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படுகிறது, அவை எவ்வளவு நேரத்தில் சரிசெய்யப்படுகின்றன என்பதனை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது. நேற்று மட்டும் 52 இடங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் 15 நிமிடங்களுக்குள்ளேயே மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக பல அரசு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நிலையை சீரமைத்து, புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு எதிரானதல்ல. ஆனால் நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களை அழித்து வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதே அரசின் கருத்தாகும். இந்த விவகாரத்தில் ஆய்வு செய்து, தேவையான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.