

சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, தன் பதவி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழக அரசு அமைத்தது.
இதை எதிர்த்து சூரப்பா, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
நீதிபதி கேள்வி
இதற்கிடையில், நீதிபதி பொன்.கலையரசன் தன்னுடைய விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சூரப்பா வழக்கு கடந்த வாரம் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறதா? இல்லையா?. எத்தனை நாள்தான் அவர் அச்சத்தில் இருப்பார்? என்று தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கவர்னர் முடிவு
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக கவர்னர்தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக ஆணையத்தின் அறிக்கையை, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.