பொதுமக்கள் நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காக போராடுவது மிகுந்த வேதனையளிக்கிறது - நயினார் நாகேந்திரன்

தவெக ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பலமணி நேரம் நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாகத் தோல்விக்கான சான்று.

மிகுந்த வேதனை

"ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்" என்று வாக்குறுதியளித்த தவெகவின் பொய்களை நம்பி வாக்களித்த மக்கள், கோடை வெப்பம் பொறுக்க முடியாமல் குழந்தை குட்டிகளுடன் இன்று நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காக போராடுவது மிகுந்த வேதனையளிக்கிறது. முந்தைய ஆட்சியில் அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று கதை கட்டினார்கள், தற்போதைய தவெக ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறார்கள். மொத்தத்தில் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர காட்சியும் மாறவில்லை, மக்களின் கவலைகளும் தீரவில்லை.

தனது சொந்த துறை இப்படி இருளில் மூழ்கி கிடப்பதை கவனிக்காமல், திருப்பரக்குன்றம் தீபத்தூணை ஒளிர விட மாட்டோம் என முட்டி மோதிக் கொண்டிருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை போன்றோருக்கு அடிப்படை அரசு பதவி வகிக்கக் கூடத் தகுதியில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com