அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை கூறினார்
அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
Published on

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சமத்துவபுர புனரமைப்பு பணிகள், 15-வது நிதிக்குழுவின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் பணிகள், ஜல்ஜீவன் மிஷன், பள்ளி கட்டிட சீரமைப்பு பணிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பணிகள் குறித்து துறை வாரியாக ஒவ்வொரு அலுவலரிடமும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா விரிவாக கேட்டறிந்தார்.

அறிவுரை

அதன் பின்னர் அவர் கூறுகையில், துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்வதோடு, தரமான முறையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முடிவுற்ற பணிகளை தொடர்ந்து கண்காணித்து நல்ல முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தீர்வு காணப்படாத மனுக்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு திட்டம் சிறப்பாக அமைய வேண்டுமென்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com