குதிரை பேரம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் செங்கோட்டையன்

திமுகவுடன் கூட்டணி அமைக்க துடித்து குதிரை பேரம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.
செங்கோட்டையன்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் 38 சதவீதம் வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் இருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் விரும்பும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குதிரை பேர ஆட்சி நடைபெறுவதாக கூறுகிறார்கள். முதலில் குதிரை பேரத்தை நடத்தியது யார்? திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் பேசியது யார்?. எம்ஜிஆர், ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆக இருந்த காலத்திலும் அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்ததே இல்லை. ஜெயலலிதா மீது வழக்கு போட்டு அவரை சிறையில் அடைத்தது திமுக. இதையெல்லாம் மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி அமைக்க துடித்து குதிரை பேரம் நடத்தியது எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நாடறியும். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்-அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சேர்ந்தவர் தானா? என்ற சந்தேகம் எழுகிறது.

பணநாயகத்தை வீழ்த்தி..

எனவே குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டார்கள் என்ற உண்மையை தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்த ஜெயகுமார் போன்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய என்ன காரணம்?. திமுகவுடன் அதிமுக கூட்டணி சேர விரும்பியதுதான் அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முதல் காரணம். எங்களைப் பொறுத்தவரை குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் தனித்து நின்று பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை வெற்றி பெற செய்தது தவெக. அதிமுகவில் சிலர் குதிரை பேர ஆட்சி, லாட்டரி பேர ஆட்சி என்று கூறுகிறார்கள்.

மேகதாது அணை

இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது சட்டமன்றம். நான், விஜய் பாலாஜி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இதற்கான பதிலை கூறுவோம். இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் இந்த மாவட்டத்தின் இரு அமைச்சர்களும் மக்களுடன் இணைந்து பணிகளை செய்து முடிப்போம்.மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசின் ஆட்சேபனையை மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com