

சென்னை,
இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“எண்ணற்ற தியாகங்களாலும், போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.