தமிழ்நாட்டில் கள் விற்பனை சாத்தியமா என்று ஆராயப்படும் - அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் இல்லாத இடங்களிலும், கூடுதல் நேரம் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதும் எங்காவது ஓரிரு இடத்தில் நடந்திருக்கலாம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தமிழ்நாட்டில் கள் விற்பனை சாத்தியமா என்று ஆராயப்படும் - அமைச்சர் முத்துசாமி
Published on

ஈரோடு,

ஈரோட்டில், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக, சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். அவ்வாறு இலக்கு நிர்ணயிப்பதில்லை. தவறான வழியில் போய், ஏதாவது தப்பாகிவிடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடை விற்பனை கண்காணிக்கப்படுகிறது. விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் அல்ல.

டாஸ்மாக் இல்லாத இடங்களிலும், கூடுதல் நேரம் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதும் எங்காவது ஓரிரு இடத்தில் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த கடைக்காரர்களையும் குறை சொல்வது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். எந்த டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தால் அந்த கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் 25 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இதில் 10 பேர் குற்றம் செய்வதற்காக அனைவர் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது.

கள் இறக்கி விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என அண்ணாமலை கூறி உள்ளார். கள் விற்பனை என்பது மிகப்பெரிய பணி. ஒரே நேரத்தில் அறிவித்து செயல்படுத்தி விடமுடியாது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கை உள்பட பல்வேறு தகவல்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கள் விற்பனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com