

சென்னை,
மத்திய, மாநில அரசுகள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2030-ம் ஆண்டுக்குள் 30 முதல் 35 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் மின்சார வாகன கொள்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.
இந்த கொள்கையின்படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்துக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தநிலையில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் பணியில் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது.
மின்சார வாகன கொள்கைப்படி கிடைக்க இருக்கும் வேலைவாய்ப்புகளை பெற கல்வித்தகுதி என்ன? என்பது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதிநிர்மலா சாமி நிருபர்களிடம் கூறினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
ஆழமான பயிற்சி
கேள்வி: மின்சார வாகன கொள்கைப்படி வேலைவாய்ப்புகளை பெற தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை எடுத்து வரும் நடவடிக்கை என்ன?
பதில்: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் 89 ஐ.டி.ஐ.க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 53 ஐ.டி.ஐ.க்களில் ஆட்டோமொபைல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மின்சார வாகன கொள்கைப்படி வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான பயிற்சிகளை அளிக்கும் பணியில் இறங்கி உள்ளோம்.
குறிப்பாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது, பராமரிப்பதற்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் உள்பட பொறியியல் துறையில் உள்ள 58 பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படும். மின்சார வாகனங்களில் பிற வாகனங்களை போன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் போன்று இல்லாமல் வெறும் 16 உதிரிபாகங்கள் மட்டுமே இருக்கும். அவற்றை உற்பத்தி செய்வது, பராமரிப்பது குறித்த ஆழமான பயிற்சியும் அளிக்க இருக்கிறோம். இவர்கள் புதிதாக தொடங்க இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற இருக்கின்றனர்.
53 மின்சார கார்கள்
கேள்வி: மாணவர்களுக்கு தொழில்சார்ந்த பயிற்சிகளை எவ்வாறு அளிக்க உள்ளர்கள்?
பதில்: இன்றைய உலகில் மிகவும் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவது தொழில்நுட்ப துறையாகும். கம்ப்யூட்டர் உதவியுடன் தகவல்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புதல், தகவல் சேகரிப்பு மற்றும் சேமிப்பு பற்றியும் அரசு ஐ.டி.ஐ.க்களில் பயிற்சி அளித்து வருகிறோம்.
தொலைநோக்கு பார்வையை உணர்ந்து அதற்கேற்ப திறன் வாய்ந்த தொழிலாளர்களை தற்போது தயாராக்கும் பணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இறங்கி உள்ளன. குறிப்பாக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடரின் போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மின்சார வாகனங்கள் குறித்து பயிற்சி அளிப்பதற்காக 53 மின்சார கார்களை வாங்கி 53 ஐ.டி.ஐ.க்களுக்கு வழங்கி மாணவர்களுக்கு முறையான அடிப்படை பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். அதன்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.
உலகத்தரத்தில் ஆய்வுக்கூடம்
கேள்வி: அரசு ஐ.டி.ஐ.க்களில் மின்சார வாகனங்கள் செயல்பாடு குறித்து முறையாக பயிற்சி அளிக்கும் வசதிகள் உள்ளனவா?
பதில்: உலக தரத்திலான ஆய்வுக்கூடங்கள் அரசு ஐ.டி.ஐ.க்களில் உள்ளன. குறிப்பாக ஹூண்டாய் மோட்டார் கார் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்கு உலக தரத்திலான ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், மாதிரி கார் என்ஜின்கள் அத்துடன் மாணவர்கள் பயிற்சிக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் வழங்கி உள்ளனர்.
இதேபோன்று மாருதி கார் நிறுவனம் அம்பத்தூர், மதுரை, திருக்குவளை அரசு ஐ.டி.ஐ.க்களுக்கும், அசோக் லைலண்ட் நிறுவனம் நாமக்கல் ஐ.டி.ஐ.க்கும், டொயோட்டோ கார் நிறுவனம் பரமக்குடி ஐ.டி.ஐ.க்கும் தன்னுடைய சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் உலக தரத்திலான ஆய்வுக்கூடங்களை அமைத்து கொடுத்து உள்ளனர். இவற்றில் அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. இதன் மூலம் மின்சார வாகன கொள்கைப்படி அரசு அறிவித்துள்ள 1 லட்சம் வேலைவாய்ப்புகளை அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஐ.டி.ஐ. தேர்ச்சி
கேள்வி: இந்த பயிற்சிகள் சென்னையில் மட்டும் தான் நடத்தப்படுமா? அல்லது மாவட்ட அளவிலும் நடத்தப்படுமா?
பதில்: சென்னை கிண்டியில் 2, வடசென்னையில் மிண்டு, ஆர்.கே.நகர் மற்றும் திருவான்மியூர் உள்பட 5 அரசு ஐ.டி.ஐ.க்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டு உள்ள 53 ஐ.டி.ஐ.க்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கேள்வி: இந்த வேலைகளை பெற என்ன கல்வி தகுதிகளை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்?
பதில்: குறைந்த பட்சம் ஐ.டி.ஐ. தேர்ச்சி இருக்க வேண்டும். அரசு ஐ.டி.ஐ.க்களில் சில பாடப்பிரிவுகளை படிப்பதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும், சில பாடப்பிரிவுகளை படிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்கள்
கேள்வி: மின்சார வாகன கொள்கைப்படி எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்புகளை பெற முடியுமா?
பதில்: அவ்வாறு இல்லை, மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் உள்பட பொறியியல் துறையில் உள்ள 58 பிரிவுகளில் படித்தவர்களும் வேலைவாய்ப்புகளை பெற முடியும். இதில் வெல்டிங், டர்னர், லிப்டு ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை படித்தவர்களுக்கும் வேலை கிடைக்கும்.
கேள்வி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் திறன்மிகு பணியாளர்கள் வேலைவாய்ப்பு பெற முடியுமா?
பதில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தாரக மந்திரமாக ஒன்றை கூறுவோம். அதாவது திறன்மிகு திங்கள், சேவை செவ்வாய், போட்டி தேர்வு புதன், விழிப்புணர்வு வியாழன், வேலைவாய்ப்பு வெள்ளி என்று ஒரு நாள், ஒரு செயல்பாடு என்ற விதத்தில் செயல்படுகிறது.
இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்கள் நடந்து வருகிறது. வாரம் 2 ஆயிரம் பேர் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று வருகின்றனர். இதில் திறன் பயிற்சி தொடர்பான வேலைகளை பெற விரும்புகிறவர்கள் திங்கட்கிழமையும், திறன் பயிற்சி பெற பதிவு செய்ய வெள்ளிக்கிழமையும் சென்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.