பைக்கில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

வேனும், பைக்கும் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுரை ஐகோர்ட்டு
கோப்புப்படம்
Published on

மதுரை,

பைக்கின் பின் இருக்கையில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்று விபத்து வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பைக் விபத்து

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் (19 வயது). இவர் கடந்த 10.5.2018 அன்று பைக்கில் வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். பைக்கின் பின் இருக்கையில் இளம்பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். திடீரென எதிரே வந்த வேனும், பைக்கும் மோதின. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த இளம்பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கோபாலின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு, அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனம் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இயல்பான உற்சாகம்

அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விபத்துக்கு பைக்கை ஓட்டி வந்த கோபாலும் ஒரு காரணம். எனவே இழப்பீட்டுத்தொகையில் பாதியை குறைத்து இருக்க வேண்டும் என வாதாடினார்.

பின்னர் மனுதாரர்களின் வக்கீல் ஆஜராகி, நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதில் தலையிடத் தேவையில்லை என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. பைக்கை ஓட்டிய 19 வயது இளைஞரின் பின் இருக்கையில் அவரது காதலி அமர்ந்திருந்தார். காதலி பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, எந்தவொரு டிரைவருக்கும் இயல்பாகவே உற்சாகம் ஏற்படும். வரைபடத்தை பார்த்தாலே, இது நேருக்குநேர் மோதிய விபத்து என்பது தெளிவாகிறது. வேன் சரியான பக்கத்தில்தான் வந்து கொண்டிருந்தது.

விபத்துக்கு காரணம்

பைக்தான் தவறான பக்கத்தில் (சாலையின் வலது புறத்தில்) சென்றுள்ளது. இது போக்குவரத்து விதிமீறலாகும். இறந்தவரின் கவனக்குறைவும் இந்த விபத்துக்கு காரணம் என நாங்கள் கருதுகிறோம். அவரது பங்கு 25 சதவீதம் என நிர்ணயிக்கிறோம். அதற்கேற்ப இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com