சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமனம் செய்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு
Published on

சென்னை,

சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 105 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக இந்த பல்கலைக்கழகத்துடன் இருக்கின்றன. இதுதவிர பல்கலைக்கழகத்தில் 27 துறைகளும் உள்ளன.

இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக குழந்தைவேலு என்பவர் இருந்தார். அவருடைய பதவிகாலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றதையடுத்து, தற்போது பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னை கிண்டி ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்படுகிறார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார். ஆர்.ஜெகன்நாதன் கற்பித்தல் பணியில் 39 ஆண்டுகாலம் அனுபவமிக்கவர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் டீன், வேளாண் வானிலை, வேளாண்-காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர், தலைவராகவும் இருந்துள்ளார்.

55 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கும் இவர், அதில் 14 கட்டுரைகளை சர்வதேச நிகழ்வுகளில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், 5 சர்வதேச கல்வி, ஆராய்ச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறார். இதுதவிர தேசிய அளவிலான மாநாடுகளில் 7 ஆய்வு கட்டுரைகளை வழங்கியுள்ளார். ஒரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். ரூ.7 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள 8 ஆய்வு திட்டங்களை நிறைவேற்றியுள்ள ஆர்.ஜெகன்நாதன், 14 ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

சுனாமியால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு வளாக பயிற்சியையும், வேளாண் துறை சார்ந்த புதிய வேளாண் தொழில்நுட்பம் தொடர்பான 25 விழிப்புணர்வு நிகழ்வுகளையும், 20 தானியங்கி வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனை அமைப்பு விழிப்புணர்வு திட்டம் தொடர்பான நிகழ்வுகளையும் நடத்தி இருக்கிறார்.

2017-ம் ஆண்டு இந்திய வேளாண் வானிலை ஆய்வு சங்கம், இவருக்கு இந்திய வேளாண் வானிலை ஆய்வுக்கான சேவை விருதை வழங்கி இருக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் 8 ஆண்டுகளாக பேராசிரியர், தலைவர், டீன் ஆக பணியாற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தை நன்கு அறிந்தவர். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பல கல்லூரிகளில் கல்வி கவுன்சில் உறுப்பினர், கல்வி வாரிய தலைவர், உறுப்பினராகவும் இருந்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்பட 13 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆர்.ஜெகன்நாதனிடம் வழங்கினார். அப்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com