

திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன.
சில காளைகள் பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை பந்தாடின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், ஆட்டுக்குட்டி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
659 காளைகளும், 314 வீரர்களும் களத்தில் இறங்கினர். இதில் காளைகள் முட்டியதிலும், உதைத்ததிலும் 9 வீரர்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
மணிகண்டன் (வயது 25) என்ற மாடுபிடி வீரரின் மார்பில் காளை காலால் உதைத்து தள்ளியது. அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே தண்டவாளத்தில் ஓடிய ஒரு காளை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பலத்த காயம் அடைந்தது. மைதானத்தை தாண்டி வந்த மற்றொரு காளை திடீரென மயங்கி விழுந்து இறந்தது.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு மாதாகோவில் தெருவில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் துரைக்கண்ணு ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அவை களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை வீரர்கள் விரட்டிப்பிடித்து அடக்கினர். சில காளைகளை நெருங்கவே முடியவில்லை. அவை மாடுபிடி வீரர்களை முட்டித்தள்ளின.
அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், ஆட்டுக்குட்டி, சைக்கிள், ரொக்கம் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மொத்தம் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. திருச்சி, தஞ்சை 2 ஊர்களிலும் மொத்தம் 61 பேர் காயம் அடைந்தனர்.